சமீபத்தில் கவிஞர் நா. முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்பவன் படித்து முடித்தேன்.
சிறுவயதிலிருந்து நான் யாரையெல்லாம் வேடிக்கை பார்த்தேன் என்று எனக்கும் ஒரு மனவோட்டம் எழுந்தது.
ஊரில் மிகப்பெரும் ஆளுமைகளாக அன்று எனக்கு மனதில் பதிந்த நிறைய முகங்கள் என் மனதுக்குள் தோன்றி மறைந்தன.
ஊர் சுவரில் அரசியல் தலைவர்களின் சித்திரங்களை வரையும் செழியன் மாஸ்டர், பஞ்சர் கடை வைத்திருந்த முத்து அண்ணன், ஸ்ட்ரிக்டான ட்யூஷன் டீச்சரான யசோதா அக்கா, ஒரு அதட்டலிலேயே கொலை நடுங்க வைக்கும் பி.இ.டி வாத்தியார் – பெருமாள், கையாலேயே சீட்டி அடித்து டிரைவருக்கு சிக்னல் கொடுக்கும் முத்தமிழ் அண்ணன், படிப்பென்றே என்னவென்று தெரியவில்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் வெற்றிலை பாக்கு வாயுடன் முத்தங்களை அள்ளிக்கொடுத்து படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திக்கொண்டே இருந்த மரகதம் அம்மாச்சி, பஞ்சாயத்துகளில் பிரச்சனைகளை கேட்டு கணீர் குரலில் தீர்ப்பு வழங்கும் ராமமூர்த்தி அய்யா….
இவர்கள் அல்லாது நான் இன்றும் மிரளும் ஒரு ஆளுமை முனாஃபர் பாய்..
நான் முதன்முதலில் பார்த்த போது முனாஃபர் பாய்-க்கு வயது 50க்கு மேல் இருக்கும். டீக்கடை நடத்துகிறார். திருமணம் ஆகாதவர். ஆனால் இரண்டு மகன்கள் உண்டு. ஒருவன் ஆற்றில் அடித்துக்கொண்டு வந்த போது முனாஃபர் பாய்-யால் காப்பாற்றப்பட்டவன் – பெயர் நேதாஜி. இன்னொருவன் 10 வருடங்களுக்கு முன்பு பரிட்சையில் பெயில் ஆனதற்காக விஷம் குடித்தவன் – பெயர் ஆண்ட்ரூஸ்.
அவர் நடத்தும் டீக்கடையில் இரண்டு தூண்கள் அவரது மகன்கள் தான். நேதாஜி பி.காம் வரை படித்துவிட்டு மீண்டும் முனாஃபர் பாய் கடையிலேயே கணக்கு வழக்குகளையும், கடைக்கான சரக்கு வாங்குவது போன்ற வேலைகளை பார்த்துக்கொண்டான். 7வது பெயில் ஆன ஆண்ட்ரூஸ் இப்போது 12வதும் முடித்துவிட்டு அவனும் முனாஃபர் பாய் உடனே இருந்துகொண்டான்.
முனாஃபர் பாய் – காலை 4.30 மணிக்கு கடையை திறப்பார். 5 மணிக்கெல்லாம் உள்நாக்கில் இனிப்பது போன்ற தேநீரை அருந்துவதற்கு பெருங்கூட்டமே கடையில் கூடியிருக்கும். வரிசையாக 15 டீ க்ளாஸ்களை அடுக்கி அத்தனையிலும் சரியான அளவு சீனி போட்டு, கொதிக்கவைத்த டீயை ஒரு சொட்டு கூட சிந்தாமல் ஆத்தி, சம பங்காக க்ளாஸ்களில் ஊற்றி அதை ஒரு துணியால் துடைத்து ஒவ்வொரு பேராக சொல்லி அழைத்து, வாய் முழுக்க மனதிலிருந்து அரும்பி வழியும் வேஷம் இல்லாத புன்னகையை சிந்திக்கொண்டே அவர்கள் கையில் டீயை தருவார். 5 மணிக்கெல்லாம் சூடான மெதுவடையும், மசால்வடையும், கீரை வடையும் கொஞ்சம் சுப்ரபாதமும் கிடைக்கும். கடையில் ஏற்றி வைக்கும் ஊதுவத்திக்கு தனியொரு மனமுண்டு. அது முனாஃபர் பாய்-யின் அன்பாக கூட இருக்கலாம்.
எல்லா பலகாரங்களும் 150 என்ற எண்ணிக்கையில்தான் இருக்கும். முந்திக்கொள்வார்க்கு அன்று சொர்கம் நிச்சயம். 11 மணிக்கு மீண்டும் வெஜ் போண்டாவும், மெது போண்டாவும். 4 மணிக்கு உருளைக்கிழங்கு, பெல்லாரி வெங்காயம், வாழைக்காய், அப்பளம், மிளகாய் பஜ்ஜிகள் கிடைக்கும்.
முனாஃபர் பாய் கடையில் காலை மாலை என இரண்டு அதிகம் விற்பனை ஆகும் ஒரு பலகாரம் – பொட்டலம். மெது பக்கோடா என்று ஊரில் சொல்வார்கள். பொடி பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயமும் பச்சைமிளகாயும் போட்டு எண்ணெய் சட்டியில் உதிர்த்துவிடப்பட்டு செந்நிறமானதும் வடித்து எடுத்து அதன் மீது தேங்காய் சட்னியை ஊற்றி தருவார். தேநீரை உரிந்துகொண்டே மெது பக்கோடா தின்பது பலருக்கு ஒரு நாளின் அதிகபட்ச லட்சியம்.
எலெக்ட்ரிக்கல் வேலை செய்பவர்கள், கட்டட வேலை செய்பவர்கள், வயல் வேலை செய்பவர்கள், தென்னங் கள்ளு இறங்குபவர்கள், மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் முனாஃபர் பாய் கடை தேநீரும் பொட்டலமும்தான் ஒரு நாளின் உந்துசக்தி. இன்ன இன்னார் இத்தனை மணிக்கு வருவார்கள் என்றொரு கணக்கு வைத்திருப்பார். இரவல் கேட்டு வருபவர்களுக்கு கூட முனாஃபர் பாய் நண்பராய் தான் தெரிவார்.
சில நாட்களில் ‘சீக்கிரமாய் பலகாரங்கள் தீர்ந்துவிடுகிறது கொஞ்சம் அதிகமாய் செய்தால் என்ன பாய்?’ என்று கோபித்துக்கொள்வோர்கள் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட அவர் அந்த எண்ணிக்கையை தாண்டியதே இல்லை. ஒவ்வொரு பலகாரமும் 150 என்ற எண்ணிக்கையில் தான் இருக்கும். அதனால் தான் அவர் கடையில் எதுவுமே மிஞ்சாது.
வயல் வேலை செய்யும் பேச்சியாத்தா, பைக் பட்டறை சாலமன், கொத்தனார் பாப்பையன், ப்ளம்பர் அய்யனார் என ஒவ்வொருவர் பெயரும் சொல்லி ‘சௌரியமா?’ என ஆரம்பித்து குறைந்தது 2 நிமிடம் பேசிவிட்டுதான் அனுப்புவார். ஊரில் ஒவ்வொருவர் பெயரும் அத்துப்படி. ‘பாய் தாத்தா’ என்று குதூகலிக்க குழந்தை ரசிகர் பட்டாளம் கூட உண்டு. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டவர்களுக்காக பால் வாங்க வருபவர்களுக்கு பால் இலவசம். எத்தனையோ பேர் என் கண் முன்னரே அவரை மனம்விட்டு வாழ்த்திவிட்டு செல்வதை பார்த்திருக்கிறேன்.
இன்றைக்கு மேனேஜ்மென்ட்-டில் பெரும் பகுதிகளாக இருக்கும் கஸ்டமர் சர்வீஸ், ரிப்பீட் கஷ்டமர்ஸ்-ஸை எப்படி வரவழைப்பது, நன்கொடை, பர்சனல் கனக்ட், ஒரு பொருளுக்கான டிமாண்ட்-ஐ உருவாக்குவது, குவாலிட்டி இதெல்லாம் 1990-களிலேயே தன் ஆளுமையால் கட்டிப்போட்ட மனிதர் முனாஃபர் பாய்.
இன்றும் முனாஃபர் பாய் இல்லாத அவரது ‘நண்பர்கள் தேநீர் நிலையம்’ அசைக்க ஆளின்றி வேற்று மதத்தவர்களான முனாஃபர் பாய்-யின் மகன்கள் நேதாஜி மற்றும் ஆண்ட்ரூஸ்-ஸால் நடத்தப்படுவது பெரும் மகிழ்ச்சி.
காலத்தில் ஓட்டத்தில் எல்லாமே கரைந்தோ அழிந்தோ போய்விடுகிறது.
மனிதன் காட்டாற்று வெள்ளம் போல் விட்டுச் சென்ற அன்பை அப்படி அழித்துவிட முடியுமா என்ன?