‘கண் சிமிட்டல்’
எழுதப்படும் ஒவ்வொரு கதைகளுக்கும் பொருத்தமான ஒரு தலைப்பை யோசிப்பதே இன்னொரு கதை போன்று இருக்கும். குறுங்கதைகள் என்று முடிவான பின்பு தலைப்பிற்காக ஒரு நாள் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். எழுதி வைத்திருந்த அத்தனை குறுங்கதைகளும் சின்னச் சின்னதாய் நிகழ்வுகளாகவும் எழுத்துகளாகவும் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தன.

சோ….வென்று மழை பெய்து முடிந்த ஒரு முன்னிரவு.

மழையின் சொச்சங்களாக சாரல்கள் காற்றுடன் ஏதோ உடன்படிக்கை செய்து கொண்டு ‘நீ பாடு – நான் ஆடுகிறேன்’ என்று கூத்தடித்துக்கொண்டிருந்தன. இயற்கையின் கூத்துகள் தான் எவ்வளவு வேடிக்கையானவை. தன் ஆட்டம்-பாட்டத்திற்கு மனிதர்களை அவை ஒரு பொருட்டாக எப்போதுமே மதித்ததில்லை. அதனை கண்டுகளித்தவாறே ரொம்ப நேரம் அமர்ந்துவிட்டேன் என்றும் நினைவுகள் எங்கெங்கோ என்னை கூட்டிச் சென்றுவிட்டது என்றும், வெகுநேரம் ஆன பின்புதான் என்னால் உணர முடிந்தது.

சிலநேரங்களில் மெய் மறந்துவிடுவது இயல்பு. அந்நேரத்தில் உடல் அசைவுகள் இருப்பதில்லை, நிதானம் இருப்பதில்லை, மனம் போன போக்கில் அதை விட்டுவிட்டு கட்டுப்படுத்த எண்ணமின்றி நாமும் அதன்பின்னே ஓடிவிடுகிறோம். அந்நேரத்தில் எனக்கு ‘கண் இமைகள்’ மட்டும் சிமிட்டிக்கொண்டதாக ஒரு ஞாபகம் தட்டியது.

அப்போதுதான் இந்தக் குறுங்கதைத் தொகுப்பிற்கு ‘கண் சிமிட்டல்’ என்று பெயர் வைக்கலாம் என்று தோன்றியது.

‘கண் சிமிட்ட’லின் கதைகளெல்லாம் ஒவ்வொரு வாசகரையும் ஒவ்வொரு மாதிரி இணைக்கும் என்பதால் கதைகளில் எங்கேயும் சரிவர காலமோ வருடமோ ஊர் பெயர்களோ குறிப்பிடப்பட்டிருக்காது.

எப்போதெல்லாம் கண் சிமிட்டுகிறோம்?

அழகான விஷயத்தைப் பார்க்கும்போது ஏதோ ஒரு நொடியில் நாமே நம்மை மறந்து ‘அழகா இருக்கு’ல்ல என்று நினைத்து கண் சிமிட்டுகிறோம்.

ஏதோ ஒரு நினைவின் பழைய பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது ஒரு கடந்தகாலத்தின் மறக்க முடியாத, முயன்றாலும் மறக்க இயலாத ஒரு தென்றலான நிகழ்வை நினைவுகூரும்போது கண் சிமிட்டுகிறோம்.

நமக்குப் பிடித்த நபர்கள் எப்போதாவது செய்யும் கோபப்படுத்தாத சின்னஞ்சிறு குறும்புகள், அசைவுகள், சேட்டைகள், சமிக்ஞைகள், குறும்புன்னகை, நனைந்திருக்கும் உதட்டு வரிகள், ஆசைப் பார்வைகள், போர்வைச் சண்டைகள், கிள்ளு முத்தங்கள், செல்லத் தீண்டல்கள், வலிக்காத அடி, பாட்டி தாத்தா வீட்டு ஆசீர்வாதங்கள் என எல்லாவற்றுக்கும் கண் சிமிட்டுகிறோம்.

நம் ‘கண் சிமிட்டல்’ இயல்பு வாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுக்கப்பட்டது. கடந்தகாலத்தைப் பேசுகிறது, நண்பர்களையும், பெற்றோர்களையும், சொந்த ஊரையும், மறந்த முகங்களையும், சிறந்த மக்களையும் அதே வாசனையோடும் அப்போது நினைவு கூர்ந்த இசையோடும் பாடல்களோடும் கை பிடித்துக் கூட்டிச் செல்கிறது.

கடந்தகாலம் – இனித்துக்கொண்டே வலிக்கும் (அ) வலித்துக்கொண்டே இனிக்கும்.

நிகழ்காலம் – அதை அசைபோட வைக்கும்.

எதிர்காலம் – அதை வரும்போது பார்த்துக்கொள்வோம்.

இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளைப் படித்து முடிப்பதற்கு உங்களுக்குத் தேவையான நேரம் ஒருசில கண்சிமிட்டல்களாக இருக்கலாம். எந்தக் கதைக்கெல்லாம் ‘நல்லா இருக்குல்ல’ என்று கண்சிமிட்டினீர்கள் என்று குறித்துக்கொள்ளுங்கள். வாய்ப்புகள் அமையும் போது ஒரு குளம்பியுடனோ தேநீருடனோ சில கண் சிமிட்டல்களைப் பரிமாறிக்கொள்வோம்.

சரி…

காலத்தோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் ‘கண் சிமிட்ட’லாமா?