முதல் பெஞ்சுக்காரனுக்கு இல்லாத ஒரு சுதந்திரம் கடைசி பெஞ்சுக்காரனுக்கு உண்டு.
வகுப்பு நடைபெறும்போது தோசை திங்கலாம்.
தூங்கலாம்.
புத்தகத்தின் நடுவே வைத்து வேறு புத்தகங்கள் படிக்கலாம்.
எல்லோரது அங்க அசைவுகளையும் நோட்டம் விடலாம்.
SMS அனுப்பலாம்.
கிண்டல் செய்யலாம்.
நோட்ஸ் எடுக்காமல் டபாய்க்கலாம்.
முக்கியமா சைட் அடிக்கலாம்.
அந்த கடைசி பெஞ்சில் முதல் பட்டனை அவிழ்த்துவிட்டு விரல் நுனிகளில் பேனாவை வைத்து சுழற்றிக்கொண்டு மின்சாரம் இல்லாத அந்த மதிய வகுப்பில் கொண்டுவந்த 5 subject நோட்டை வைத்து விசிற முற்படும்போது தான் ஒரு மிதமான புயலாய் வேகமாக தென்றல் வீசியது.
காலிலே தஞ்சாவூர் கலையாய் மருதாணி.
காட்டன் புடவை.
கல்லூரிக்கு சேலை கட்டி வரும் ஒரு சிலரில் இவள் கோயில் சிற்பம்.
தேவதைகளுக்கெல்லாம் அம்மா.
அம்மா என்றாலே அழகு தான்.
இவள் அம்மாவை விட அழகு.
கையில் ஏதோ நோட்ஸ்.
மணிக்கட்டில் கிளாஸ் வளையல்.
நீண்ட பூரான் போன்று கருப்பு ஜடை.
அந்த மயிரருவியில் சின்னதாய் மஞ்சள் ரோஜா.
பூத்த பின் தலையில் வைத்தாளா இல்லை தினமும் அவள் தலையில் தான் பூக்கின்றதா என்கிற சந்தேகம்.
கருப்புத் தோல் தான்.
ஆனால் நெருப்புப் பார்வை.
பன் போன்ற கன்னம்.
அதில் செர்ரியை செருகி எடுத்ததைப் போன்ற சின்ன பள்ளம்.
தீபம் போல் போட்டு.
அதன் மேல் சுண்டுவிரல் நகம் போல் விபூதி.
கோவைப்பழம் போல் உதடு பழைய உவமை என்பதால் இதை Maybelline Baby Lips விளம்பரத்தில் வருவதைப் போல Pink உதடுகள் என சொல்லலாம்.
கிளியே கொத்தித் தின்ன வெறி கொள்ளும்.
எனக்கு தோன்றாதா என்ன?
இன்றுடன் இவள் என் வகுப்பிற்கு வந்து எண்ணி 30 நாட்கள் ஆகிவிட்டன.
நான் எப்படியாவது என் காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என்று என்ன ஆரம்பித்தும் 30 நாட்கள் ஆகிவிட்டன.
இன்று சொல்லியே தீர வேண்டும்.
வகுப்பு முடிந்தவுடன் அவளிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும்.
தமிழ் படங்களில் வந்திருக்கும் அத்தனை Proposal Scenes-ம் மனதில் வந்து செல்கின்றன.
ஆனால் வாசிக்க இளையராஜா ரகுமான் இல்லை.
பத்தாத குறைக்கு இந்த Drums சிவமணி வேறு இதயத்துக்குள் உக்கார்ந்துகொண்டு சாவு தப்பையும் –கல்யாண கெட்டி மேளத்தையும் Remix அடித்துக் கொண்டிருக்கிறார்.
வகுப்பு முடிந்தது.
பக்கத்தில் உக்காந்து கொண்டு இந்த நட்புக் கழுகளோ எனக்கு செருப்படி வாங்கி கொடுக்க தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது நம்ம கவுண்டமணி அண்ணே ஸ்டார்ட் மியூசிக் சொல்லிவிட்டார்.
டிஞ்சுக்கு டிஞ்சுக்கு டிஞ்சுக்கு டிஞ்சுக்கு
டிஞ்சுக்கு டின்டும் டிஞ்சுக்கு டின்டும்…..
எழுந்தேன்.
நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் காலின் கீழே ஓர் நிலநடுக்கம்.
4 ரிக்டர்ஸ்க்கு குறைவே.
அருகில் சென்றேன்.
தெய்வ வாசனை.
உயரம் பார்த்தேன். பொருத்தம்.
லேசான தூறல் மழை வெளியில்.
சாரல் எங்களிருவர் மீதும்.
திரும்பினாள்.
வராந்தாவில் வெள்ளந்தியாய் நின்றாள்.
சுற்றி எவரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்ட பிறகு,
“ஹாய்”
“ஹை”
“உன்கிட்ட கொஞ்சம்..”
“உங்கிட்டயா…. (ஆச்சர்யமாக)… சொல்லுங்க…“
“இல்ல… உங்ககிட்ட”
“ம்ம்ம்ம்..”
“நீங்க எனக்கு பொண்டாட்டி ஆயிட்ரிங்களா ??”
சிவமணி Finishing touch அடித்துக்கொண்டிருக்கிறார்.
மழை பின்னி எடுக்கிறது.
வெறித்தனமான இடி சத்தம்.
மடார் என ஒரு மரக்கிளை உடையும் சத்தம்.
இந்த இயற்கை இசைகள் மனிதனால் கேட்கமுடியாத 2௦௦௦௦ decibel தாண்டிவிட்டது.
உயிர் போய் உயிர் வந்த போது,
உலகம் இயங்குவதை நிறுத்தி மீண்டும் இயங்கிய போது,
சீனா இந்திய எல்லையில் சில மில்லி மைல்களை ஆக்கிரமித்திருந்த போது,
ஒரு பெண் தன் கணவனுக்கு வேறு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்திருந்த போது
ஒரு ஆண் எழுந்து குளித்து சாப்பிட்டு முடித்திருந்த அந்த இரண்டு நிமிடத்திற்குள் அவள் அவளுக்கு தெரிந்த எல்லா கெட்ட வார்த்தைகளையும் பேசி முடித்திருந்தாள்.
ஆம். நிராகரித்துவிட்டாள்.
மடார் என கிளை உடையவில்லை அது என் கடவாய் பல்.
சித்தம் கலங்கி முழி பிதுங்கி சுதாரித்து இரண்டு கண்களையும் அகலமாய் விரித்து விழித்த போது இரண்டாய் தெரிந்த அவள் உருவம் ஒன்றாய் சேர்ந்தது.
பின்பு பேச ஆரம்பித்தாள்.
“Internals இல்லை, Attendance இல்லை, Class-ல Concentration கிடையாது, Assessment-ல நாலு பேப்பர்க்கு மேல எழுதறதில்ல. உனக்கெல்லாம் Love.”
அந்த மேடம்க்கு குடுத்து வெக்கல.
ஆனா மனசு கேக்கலையோ என்னவோ அவ ஞாபகமா ஒரு Gift குடுத்துட்டு போனா.
Clear பன்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.
Arrear.
-மனோ பாரதி
25 – 09 – 2014
கடைசி பெஞ்சுக்காரன்..