மனுஷங்கதான் எத்தனை வகை-ல்ல

சனிக்கிழமை. வெளியே உணவருந்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன். ‘வீட்டு சாப்பாடு’ என்றொரு ரோட்டோரக் கடை வைத்திருக்கும் ஆன்டியை கடந்து வருகையில் நேற்று வீட்டில் நடந்த சண்டை மீண்டும் நினைவுக்கு வரத் துவங்கியது. 

அவரது கடையில் சாப்பாடும் நன்றாக இருக்கும். வீட்டு செய்முறை. கடை போட்டிருக்கும் இடமும் அவரது வீட்டு வாசலிலேயேதான். இந்த ஆன்டிக்கும் எங்கள் வீட்டில் சமைக்கும் சரளா அக்காவுக்கும் ஒரே முக சாயல். இருவரையுமே எனக்கு பிடிக்காததற்கு தனித்தனி காரணங்கள் உண்டு. இந்த ஆண்டியை பிடிக்காததற்கு காரணம் அவரிடம் வேலை செய்யும் பாண்டியை ரொம்பவே அடிமை போல் நடத்துவார். அவனை எல்லோர் முன்னிலையிலும் வசை பாடுவாள். அவனோ கூனிக் குருகுவான். உணவருந்த வந்திருக்கும் நபர்களின் முகத்தைப் பார்க்கவே கூச்சப்பட்டு நிற்பான். 

எங்கள் வீட்டு சமையல்காரர் சரளா அக்காவை பிடிக்காததற்கு காரணம். அவர் திருடுவார். ரொம்பவே நூதனமாக திருடுவார். 5 லெமன் வாங்கிக்கொண்டு வந்தால், அதை அடுத்த நாள் லெமன் ரைஸ்க்கு உபயோகப்படுத்துவார். அதில் 3 பழங்களில் லெமன் சாதமும் 2 லெமன்களை தன் பையில் போட்டுக்கொள்வார். 3 வெள்ளரிக்காய் வாங்கிக்கொண்டு வந்தால் அதை பிரிட்ஜ்-ல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரித்து வைப்பார். புதினா, கொத்தமல்லி கட்டுகளுக்கு இடையில் ஒன்றை மறைத்து வைப்பார். பச்சை பட்டாணி பாக்கெட், தேங்காய் மூடி, துண்டுதுண்டாக வெட்டி வைக்கப்பட்ட முருங்கைக்காய், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தி  என்றைக்கெல்லாம் எங்கள் வீட்டில் சமைக்கிறாரோ அதில் சரி பாதியை எடுத்துக்கொண்டுபோய்விடுவார். அன்றெல்லாம் அவர் வீட்டிலும் அதே சமையல்தான் இருக்கும் என்பது யூகம். கொஞ்ச நாள் வரை அவர் போல் சமைக்க ஆள் கிடைக்க மாட்டார்கள் என்றே பொறுத்திருந்தோம். 

அதற்கப்பறம் அவர்களது எண்ண ஓட்டத்தில் இருக்கும் விஷமத் தன்மை தெரிய வந்தது. அதாவது இந்த வீட்டில் இருக்கும் நான்கு பேச்சுளர் பசங்களும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். எனவே அவர்களிடம் போனஸ் கேட்கலாம், சம்பளத்தை அட்வான்ஸ்-ஆக பெற்றுக்கொள்ளலாம்.  அவர்களிடமிருந்து ஒரு பொருளை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துச் சென்றாலோ, அவர்களிடம் கேட்டு கொடுக்கவில்லையென்றால் ஒரு இரண்டு நாளைக்கு உப்பு சப்பில்லாமல் சமையல் செய்வது போன்ற செயல்கள் அவ்வப்போது நடந்தேறிக்கொண்டே இருந்தன. 

ஒரு கட்டத்தில் மாத செலவு மற்றும் சமையல்காரர் சம்பளம் என்று தலைக்கு 3000 வந்துகொண்டிருந்தவை திடீரென 6500 ஆனது. அறைத்தோழர்களிடம் விசாரித்ததில் ஒரு முறை காய்கறி வாங்கினால் 1500 மேல் ஆகிறது என்றும் அது மட்டுமில்லாமல் தோசை மாவு, மளிகை சாமான்கள், சனி ஞாயிறுகளில் சமைக்கும் மீன், இறைச்சி, வீட்டு வாடகை, தண்ணீர் கேன், வை-ஃபை, மெயிண்டெனென்ஸ் என்று சேர்த்து ஒரு மாதத்திற்கு 12,000 வந்தது. அதற்க்கு மேல் பொறுக்க முடியவில்லை. இது திருட்டு. இதை நிறுத்தியே ஆகவேண்டும் என்று தோன்றியது. 

தங்களை ஏழை என்று பிரகடப்படுத்திக் கொள்ளும் பலரும் இன்னொருவனுக்கு பணம் என்பது சுலபமாக வந்துவிடுகிறது என்றும், அவர்களின் பொருளையோ பணத்தையோ உழைப்பையோ சுரண்டினால் அதில் எந்த தவறும் இல்லையென்றும் முடிவு செய்துகொள்கின்றனர். ஒரு வேளை அது தவறு என்று ஒரு நாள் சுட்டிக்காட்டப்படும் என்றாலும் அன்று தன்னை ‘ஏழை’ என்று சொல்லி பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். 

அறைத்தோழர்களிடம் பேசியபோது, அவர்களால் வெளியில் உணவருந்தி வயிறை கெடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்கள். எனவே சண்டையை நான் மட்டுமே தான் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றாகிவிட்டது. பெரும் சண்டைக்கு பிறகு இனி நான் மட்டும் இந்த வீட்டில் சாப்பிடப்போவதில்லை. வெறும் வாடகை பணம், தண்ணீர், வைஃபை-க்கு  மட்டும் கொடுத்துவிட்டு இங்கே தங்கிக் கொள்வது என்று முடிவெடுத்து அனைவரிடம் முடிவாக தெரிவித்தேன். 

சனிக்கிழமை எப்படியோ வெளியே சாப்பிட்டு ஓட்டிவிட்டேன். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்ததே 12 மணிக்கு. குளித்து முடித்து வாஷிங் மெஷின்-ல் துணி போட்டுவிட்டு கொஞ்சம் ஆஃபிஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரும் உணவருந்திவிட்டார்கள். மணியும் 2 மணி போல் ஆகிவிட்டது. இதற்கு மேல் ஹோட்டலில் சாப்பாடு கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஏதாவது கலவை சாதம் கிடைக்கும். கொஞ்ச நாளைக்கு பழகிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். 

என்னைப்போல் நிறைய பேச்சுலர்ஸ் இங்கே ரோட்டு கடைகளையும், 50 ரூபாய்க்கும் குறைவாக சாப்பாடு தரும் கடைகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். தரம், சுகாதாரம், சுத்தம் பற்றி யோசிக்கவே பணம் வேண்டுமே. 

கீழே இறங்கி ரோட்டுக்கு சென்றால் பேரதிர்ச்சி. வணிகர் சங்க நாளும் ஆளும் கட்சி பந்தும் ஒரே நாளில் வந்ததால் ஒரு கடை இல்லை. மொத்த தெருவும் வெறிச்சோடிக் கிடக்கிறது. பசி வயிறை தின்கிறது. ‘தவறு செய்துவிட்டோமோ’ என்று ஒரு பக்கம் சந்தேகம் வேறு. நான் எல்லாவற்றுக்கும் அரசியல் பேசுபவனோ நியாய தர்மம் பேசுபவனோ இல்லை. என்னவோ ஒருத்தரின் உழைப்பு இன்னொருவரால் கண்ணெதிரில் சுரண்டப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. 

‘சூப்பர் மார்க்கெட்டில் இதை பேசுவாயா, ஏன் ஏழைகளிடம் உன் வீரத்தை காட்டுகிறாய்’ என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ஒரு கூடையில் எனக்கு தேவையானது கொஞ்சமாகவும் தேவை இல்லாதது நிறையவும் எடுக்கும் சம்பாத்தியத்தில் நான் இல்லை. இன்னும் கொஞ்ச நாளில் என்னுடைய மொத்த போக்கும்கூட மாறலாம். இன்று சரளா அக்காவின் திருட்டு என்னுடைய உழைப்பின் திருட்டு. அதனால் என்னைப் பொறுத்தவரையில் என் கோபம் நியாயமானதே. 

எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டே வரும் வழியில் பாதி திறந்திருக்கும் முத்து மளிகை கடையிலிருந்து இரண்டு தட்டு முட்டையுடன் வேகமாக புறப்பட்டான், பாண்டி.

“பாண்டி”

“அண்ணா?”

“கடை இருக்கா? நீங்க மட்டும் எப்படி தொறந்துருக்கீங்க?”

“இறுக்கி அண்ணா. போலீஸ் ஒன்னு டெய்லி கடைல சாப்பாடு வாங்கும் அண்ணா. அதனால ஆன்டி தைரியம்மா கடை போட்டிருக்கு”

“ஓ”

“சாப்பட்ல-ன்னா வா அண்ணா”

வேற வழி. இதையும் விட்டால் இன்று நாள் நாசம்தான் என்பதை உணர்ந்து, “வரேன்”என்றேன். 

“உன்ன ரொம்ப திட்டுதே அந்த ஆன்டி. ஒழுங்கா சாப்பாடாச்சும் போடும்மா?”

“ஆன்டி நல்லவருன்னா. ஸ்டே பண்ணிக்க எடம், சாப்பாடு இல்லாம 9,000 சம்பளம் குடுக்குது ன்னா. மூணு வேளை ரொம்ப வேலை இருக்கும். ஆனா அது பரவால்ல அண்ணா.”

அங்கே போய் பார்த்தால், கடை போடவில்லை. 

சனிக்கிழமை இரவு ஆண்டி கீழே விழுந்து முழங்கை முறிந்துவிட்டது. பாண்டிதான் கடையை வீட்டுக்கு வெளியே வராந்தாவுக்கு உள்ளே வெளியே யாருக்கும் தெரியாதது போல் ரெண்டு அடுப்பு வைத்து ஆம்லெட் போட்டுக்கொண்டும் மீன் வறுத்துக்கொண்டும் இருக்கிறான். ஆண்டி உள்ளே கட்டிலில் படுத்திருந்தார். அவரது கட்டளைகளுக்கு பாண்டி வேலை செய்கொண்டிருந்தான். நான் இல்லாமல் இன்னொருவர் மட்டும்தான் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். 

“தம்பிக்கு சாப்பாடு வெச்சுக் குடு பாண்டி”

தொடர்ந்தார். “வேறே எங்கயும் கடை இல்ல. என்னோட ரெகுலர் கஸ்டமர்ஸ் சிரமப்படுவாங்கன்னு பாண்டிய தொறக்க சொன்னேன்”

சிரித்தார்.

பாண்டி சாப்பாடு போட்டு கொடுத்தான். 

“தம்பிக்கு நல்லா சாப்புடுங்க. நைட் போலீஸ் பிரச்சனை இருந்தா கடை இருக்காது. பாண்டி, தம்பிக்கு ஒரு மீன் வை”

“அய்யோ, அதெல்லாம் வேணாம் ஆன்டி”

“பணம் வேணாம் ப்பா. சாப்புடு. கூச்சப்படாத” 

அப்படியே தோசை கல்லிலிருந்து ஒரு துண்டு வறுத்த மீனை எடுத்து பாண்டி என் தட்டில் வைத்தான். புகை பறக்க மீனின் மசாலா வாசம் முறுகலான மீனின் தோல் சற்று கருகியிருக்கும் சாந்து தூள் அதன் மனம் பறந்து என் நாசியை தீண்டும் போதே பசியும் ஆவியாய் பறந்தது. 

மீனுக்கும் சேர்த்தே பணம் தந்துவிட்டு புறப்பட்டேன். 

அபியும் நானும் படத்தில் ஒரு வசனம் வரும். 

பிரகாஷ்ராஜ்-யிடம் பிரித்விராஜ் சொல்லுவார்,   

“மனுஷங்க தான் எத்தனை வகை ..ல்ல”என்று. ரொம்பவே ஆழமான வசனமிது.  

உப்பிட்டு சமைக்கும் இடத்தில் மனசாட்சி இன்றி ஒருவர் திருடுகிறார். தின வாடிக்கையாளர்கள் இல்லையென்றால் தனக்கு வருமானம் இல்லையென்று இன்னொருவர் நியாயம் செய்கிறார். 

‘எல்லோருக்குமே செய்யும் தொழில் தெய்வமாய் இருப்பதில்லை’ என்று தோன்றியது. 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *