ரசம் சாதம்

மிடில் க்ளாஸ் அப்பா அம்மாவுக்கு தன் பிள்ளைகளை கண்டிப்பாக வளர்ப்பதிலும் அதை வீட்டிற்கு வருபவர்களிடம் தன் பையன் அதை செய்யமாட்டான், இதை செய்யமாட்டான் என்பதில் ஒரு கெளரவம்காட்டிக்கொள்கின்றனர்.

தெருவில் விளையாட கூடாது, தெருவில் விளையாடும் பிள்ளைகளிடம் பேசினால் கெட்ட வார்த்தைகளை பழகிக் கொள்வேன் என்கிற பயம், எட்டு மணிக்கு மேல் டிவி பாக்கக் கூடாது, வீட்டில் யாரேனும் பத்தாம் வகுப்போ பன்னிரெண்டாம் வகுப்போ படித்தால் வீட்டில் கேபிள் டிவி கட் செய்யப்படும், அனாவசியமாக போன் பேசக்கூடாது, கிரிக்கெட் விளையாட சென்றால் 1 மணி நேரத்திற்கு மேல் விளையாடக் கூடாது, வகுப்பில் யாருடனும் சண்டை வளர்க்கக் கூடாது, யாரேனும் வழிய வந்து சண்டை போட்டாலும் அதை டீச்சரிடமோ வீட்டில் வந்து அப்பா அம்மாவிடமோதான் சொல்ல வேண்டும், தான் கொண்டு சென்றதை யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட வேண்டும், யாரிடமிருந்தும் எதும் வாங்கி தின்னக்கூடாது…………………………………( இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்)

90களில் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் இதுபோன்ற விதிகளில் சிலவற்றை கடந்து வந்திருப்போம்.

முதல் தலைமுறை பட்டதாரி பெற்றோர்கள்தான் இது போன்ற கடினமான விதிகளை தன் குழந்தைகள் மீது விதிப்பவர்கள்.

இதில் சற்றும் குறையாதவர்கள் என் பெற்றோர்.

இரண்டு பேருமே நல்ல உத்தியோத்தில் இருந்தவர்கள். ஊரெங்கும் நல்ல பேர்.

‘உன் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள்’ என்ற கேள்விக்கு நான் பதில் அளிக்கையில் ‘ஓ.. பரவாயில்லையே.’ என ஒரு ‘ஓ’வில் அவர்களின் ஆச்சர்யம் விரியும்.

நானும் கொஞ்ச நாள் அவர்களுடைய ‘ஓ’வில் பெருமைபட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரு சில வருடங்களில் என் பசி, வயதுக்கேற்றாற்போல் மாறியது. நன்றாக விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டில் உண்ணுவதற்கு ஒன்றும் இருக்காது. மிஞ்சினால் காலையில் அப்பாவுக்காக எடுத்து வைத்த சாப்பாட்டில் மிஞ்சிய ரசமும் சாதமும் இருக்கும். சில நாள் அதுவும் இருக்காது.

அடுத்த நாள் பள்ளிக்கு சென்றால் என் கூட படித்த நண்பர்கள் முந்தைய நாள் தான் வீட்டிற்கு சென்றதும் அவர்களுடைய அம்மா என்னவெல்லாம் செய்து தந்தார்கள் என பேசிக்கொள்வார்கள். சிலர் பஜ்ஜி தின்றதாகவும், சிலர் பணியாரம் தின்றதாகவும், சிலர் சூடாக தோசை உண்டதாகவும் பேசிக்கொள்வார்கள்.

எனக்கு அந்த தின்பண்டங்களைவிட அவர்கள் அவர்களுடைய பெற்றோர்களுடன் சிறிது நேரம் செலவிட்டார்கள் என்பதுதான் ஏக்கமாக இருக்கும். அதுபோலே எனக்கும் வீட்டிற்கு சென்று அம்மாவுடன் இருக்க வேண்டும் என்கிற நாட்களில் அம்மாவுக்கு இன்னும் உயர் பதவி கிடைத்து 8 மணிக்கு வந்துகொண்டிருந்தவர் 10 மணிக்கு வரத் துவங்கியிருந்தார்.

அவர் வீட்டிற்கு வரும்போது நான் தூங்கியிருப்பதும், நான் எழும்போது அவர் அரக்க பறக்க கிளம்பிக்கொண்டிருப்பதுமாய் சில வருடம் ஓடிப்போய்விட்டது.

இந்த மிடில் கிளாஸ் பெற்றோரிடம் இருக்கும் இன்னொரு பழக்கம் கையில் பணம் தரமாட்டார்கள். எதுவானாலும் அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள்தான் வாங்கித் தருவார்கள். கேட்டால் கண்டதையும் தின்பது உடம்புக்கு நோய் வரும் என்பது அவர்கள் கூற்று. வாஸ்தவம்தான். ஆனால் மற்ற பிள்ளைகள் என்னுடன் ட்யூஷன் முடித்துவிட்டு வரும்வழியில் பாணி பூரி தின்னும்போது நான் வாயைப் பார்க்க முடியாதல்லவா?

அங்கேதான் எனக்கு பொய் சொல்லும் பழக்கம் ஆரம்பமானது. சைக்கிளுக்கு காத்து அடிக்க வேண்டும் என்றும், நோட்டு வாங்க வேண்டும் என்றும், மைக்ரோ-டிப் பென்சிலுக்கு லெட் வாங்க வேண்டும் என்றும், நண்பனுக்கு பர்த்டே, அதனால் அவனுக்கு கிஃப்ட் வாங்க வேண்டும் என்றும் பொய் சொல்லியும் சில நாள் அஞ்சரைப்பெட்டியில் வைத்திருந்த காசை திருடியும் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியதாய் ஆகிவிட்டது.

சில நாள் தெருவில் விளையாடி வீட்டில் அடி வாங்கி வாலை சுருட்டிக்கொண்டு இருந்தேன்.

பள்ளி, பள்ளி விட்டால் டியூஷன், டியூஷன் விட்டால் வீடும் ரசம் சாதமும்.

இப்படியே போயிக்கொண்டிருந்த நாட்கள் ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. எனக்கு என்ன வேண்டுமென கேட்க ஆரம்பித்தேன். வீட்டுக்கு வந்தால் எனக்கு அம்மா வேண்டும். எனக்கு ஏதாவது சாப்பிட செய்து தர வேண்டும். நான் சாப்பிட்டுக்கொண்டே நல்ல பிள்ளையாக கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு, ஹோம் வொர்க் செய்துவிட்டு 8 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். இப்படி நடக்கும் என எண்ணி என் அறவழி போராட்டத்தைத் துவங்கினேன்.

பேச்சுவார்த்தையில் தோல்வியே எட்டியது.

ரசம்சாதங்களின் வகைகள்தான் மாறியது. தக்காளி ரசம் மட்டுமே உண்டுகொண்டிருந்த நான், அந்த போராட்டத்திற்கு பின் மிளகு ரசம், சின்ன வெங்காயம் ரசம்,

பூண்டு ரசம், பைன் ஆப்பிள் ரசம் என அப்க்ரேட் ஆனேன்.

இருந்தும் பள்ளியில் நண்பர்களில் அம்மா – பிள்ளை பாச கதைகள் மீண்டும் மீண்டும் என்னை ஏங்க வைத்தது.

எப்படியும் இவர்கள் என்னுடன் இருந்து என் ஆசைகளை பூர்த்தி செய்யப் போவதில்லை என நம்பத்துவங்கினேன்.

கையில் ஸ்லாம்பு குத்திக்கொண்டாலும், கீழே விழுந்தாலும், முள் குத்தினாலும், விளையாடும்போது அடிபட்டாலும், சைக்கிளில் இருந்து கீழே விழுந்தாலும், ஜுரம் வந்தாலும் எதையுமே அவர்களிடம் தெரியப்படுத்துவதை நிறுத்த ஆரம்பித்தேன்.

சில நாட்கள் கடந்தது.

பெற்றோர்களிடமிருந்து மனம் பிரிய ஆரம்பித்தது. இயற்கையாகவே பாசம் குறைய ஆரம்பித்தது. எங்காவது சென்று இவர்கள் இல்லாத இடத்தில் இருந்துகொள்ளலாம் என்றிருந்தது. கோடை விடுமுறைகளில் கூட தன்னால் கூட இருக்க முடியாது என்கிற காரணத்திற்காக கம்ப்யூட்டர் கிளாஸ், இன்னும் பல கிளாஸ்களில் சேர்த்துவிட்டனர்.

நொந்துபோனேன்.

நான் என் அண்ணன் படித்துக்கொண்டிருந்த பள்ளியிலேயே விடுதியில் தங்கி படித்துக்கொள்வதாக தெரிவித்தேன்.

அவர்களும் சம்மதித்தார்கள். நன்றாகவே படித்தேன்.

நான் விரும்பியதுபோல் எல்லாம் கிடைத்தது. மன உளைச்சல் குறைந்தது.

ஆனால் எனக்கு தேவையான பாசம் கிடைக்கவில்லை. கீரைகளும், வல்லாரை துவையலும், தூதுவளை சாதமும், பப்பு பூவாவும், நெய் சாதமும் கிடைக்கவில்லை.

ஆறுதலாக தொலைபேசியில் வாரத்திற்கு இருமுறை சில முத்தங்கள் கிடைக்கும்.

அது சத்தமாக மட்டுமே என் காதில் கேட்கும்.

பழகிவிட்டது.

இவ்வளவு விஷயங்கள் என்றாலும் எங்கள் நலனுக்காகவே அவர்கள் அவ்வளவு சிரமப்பட்டு வேலைக்கு சென்று சம்பாதித்தார்கள் என்பது சத்தியமான உண்மை. நான் என் பள்ளி படிப்பிலிருந்து கல்லூரி முடித்தவரை ஒரு நாள் கூட கால தாமதமாய் பள்ளிக் கட்டணம் செலுத்தியதில்லை. அந்த விதத்தில் எங்களுக்கு எந்த குறையும் வைத்ததில்லை. சிறந்த பள்ளி, மிகச்சிறந்த கல்லூரி. சிறந்த வாழ்க்கை. அவர்கள் என்ன மாதிரியான வாழ்க்கை எங்களுக்கு தர எண்ணினார்களோ அதை செவ்வனே செய்தார்கள்.

சில நேரங்களில் ‘எனக்கு தேவை இது இல்லையே, நீங்கள் எனக்கு தேவையானபோது என் பக்கத்தில் இருந்தால் போதும், நான் கவர்மெண்ட் ஸ்கூலில் படித்துக்கூட நீங்கள் எதிர்பார்க்கும் மார்க் எடுத்துக்காட்டுகிறேன்’ என்று சொல்ல மனம் துடிக்கும். அந்த தைரியம் வந்தபோது நான் பள்ளி படிப்பே முடித்துவிட்டேன்.

தானாக வளர்ந்ததால் நிறைய விஷயங்கள் மறைத்தேன். பொய் பேசினேன். இன்றும் அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. நான் எது செய்தாலும் சரி. தப்பாகும்பட்சத்தில் அடிபட்டு திருத்திக்கொள்கிறேன்.

வாழ்க்கை புரிகிறது. சில நேரங்களில் இப்படி அவர்கள் செய்ததுதான் என்னையும் என் நம்பிக்கையையும் கனவுகளையும் வடிவமைத்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதையெல்லாம் அசைபோட வைத்தாள் ஒரு குட்டிப் பெண்.

சில வாரங்களுக்கு முன் என் நண்பருடைய அக்கா வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். கூடவே அவருடைய குட்டிப் பெண்குழந்தையும். பெயர் தனிஷா. கொஞ்ச நேரத்தில் நானும் அந்த குழந்தையும் நண்பர்களாகிவிட்டோம்.

அவள் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். இங்க வா என அவளை இழுக்கொண்டு போய் ஒரு கப் நூடுல்ஸ் வாங்கிக் கொடுத்தார் அந்த அக்கா.

அவளும் கொஞ்ச நேரம் வைத்துக்கொண்டிருந்தாள். அப்பறம் என்னுடன் வந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

‘இத நீ சாப்புடு டா மனோ’ என்றாள்.

‘நீ சாப்புடு. ஏன் உனக்கு நூடுல்ஸ் புடிக்காதா’ என்றேன்.

‘உம்ம்….கும்…’ என தலையாட்டிவிட்டு ‘டெய்லி நூடுல்ஸ்தான் வீட்டுல. அம்மா வர்ற வரைக்கும் அப்பா இதான் செஞ்சு தருவார. நூடுல்ஸ் நூடுல்ஸ் நூடுல்ஸ். ‘

//உன் வீட்டுல நூடுல்ஸா டா கண்ணா.. என் வீட்டுல ரசம் சாதம் என்று எண்ணத் தோன்றியது. //

‘ஓ.. சரி பரவால. வாங்கினது வேஸ்ட் ஆயிடும்ல. இத மட்டும் சாப்டுடு’

‘நீ சாப்புடு. உனக்கு நூடுல்ஸ் புடிக்காதா’ என்றாள், என் சுருள் முடியை இழுத்துக்கொண்டே.

எனக்கு ‘ரசம் சாதம்’தான் பிடிக்கும் என்றேன்.

– மனோபாரதி

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *