கண்ணம்மா

யார் அந்த கண்ணம்மா ?

‘கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் டிக்கெட் ஒரு அழகான ‘பெண்ணின்’ -கையை கடக்கும்போது நாம் திடீரெனெ அந்த பெண்ணின் முகத்தை காண முயற்சிப்போம். ஒருவேளை அவள் பார்வை நம்மை தீண்டிவிட்டால் ஒரு நிமிடம் உடலெல்லாம் ஏதோ செய்யும். அப்படி செய்தால் ? ‘

– அவள்தான் கண்ணம்மா.

‘இரவு 2 மணிக்கு தூக்கம் வராத இரவில் எழுந்து நடந்து வீட்டின் பால்கனி-க்கு வந்தால், எதிர்வீட்டு பால்கனியில் செல்போன் ஒளியால் முகத்தில் மேக்கப் அணிவித்த பெண்ணொருத்தி நின்றிருப்பாள்.’

– அவள்தான் கண்ணம்மா.

‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் 10 பேர் கூட்டமாக சேர்ந்து மிகப்பெரிய வாகனத்தைக் கூட சடாரென நிறுத்தி கடந்து செல்வர். அதில் 100 டிகிரி வெயிலில்கூட ஒரு பார்வையால் நம் மனதை ஜில்லென வருடிச் செல்வாள் ஒருத்தி’

– அவள்தான் கண்ணம்மா.

‘சிறுவயதில் பென்சிலுக்கும் ரப்பருக்கும் சண்டை போட்ட பெண்தோழி ஒருத்தி திடீரென ஒரு குறுஞ்செய்தி மூலம் மீண்டும் நம் வாழ்வில் இணைந்து ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிடுவாள்’

– அவள்தான் கண்ணம்மா.

‘அலுவலகத்திலோ, பக்கத்து வீட்டிலோ, கல்லூரியிலோ ஒரு பெண்ணை நாம் தினந்தோறும் கடந்து வரவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த உறவு திருமணத்தில் முடியாது என மனம் ஆணித்தனமாக நம்பும். ஆனாலும் அவள்மேல் இருக்கும் பாசமோ, அக்கறையோ, அன்போ கொஞ்சமும் குறையாமல் இருக்கும்’

– அவள்தான் கண்ணம்மா

‘கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது நம் முன்னால் ஒரு பெண்ணொருத்தி நடந்து செல்வாள். தலை குளித்த தன் கூந்தலின் வாசம் அவள் வைத்திருக்கும் மல்லிப்பூவின் மேல் படந்திருக்க, அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் காற்று திருடி வந்து நம்மிடம் சேர்க்கும். அவளை ரசித்தபடியே கோவிலை சுற்றி வர இறுதி வரை அவள் முகத்தை காணாமலேயே போய்விடும். ஆனால் அவள் பின்னழகு மட்டும் நம் மனதுடன் பிண்ணிக்கொள்ளும்’

– அவள்தான் கண்ணம்மா.

‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பகுதி காதல். காதல் என்னும் புனித கடலின் கடல்கன்னியே, காதலி.’

– அவள்தான் கண்ணம்மா

‘எங்கோ பிறந்து காதலில் இணைந்து திருமணம் என்னும் அற்புதமான நிகழ்வில் வாழ்க்கைத் துணையாகி ஒரு கடவுள் போல நம்மை வாழ்க்கை முழுதும் பாதுகாக்கும் மனைவி’

– அவள்தான் கண்ணம்மா

இப்படியான கண்ணம்மாக்களின் தொகுப்பே கண்ணம்மா.இந்த தொகுப்பு ஆண்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் இணைக்கும் என்று நம்புகிறேன்.

காத்திருங்கள் அவரவரின் கண்ணம்மாவுக்காக.


மிட்டாய் பயல்

இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

இறைவன், மனிதன் என்பதெல்லாம் எப்படி ஆண்களாக மனதில் உருவகங்களை உருவாக்கியதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அதுபோல் கவிதை என்றாலே அது பெண்களுக்கானவை என்று முடிவாகிவிடுகிறது.
பெண்களுக்காக எத்தனை எத்தனை கவிதை படைப்புகளை உருவாக்கினாலும் அது அத்தனைக்கும் அழகான பெயர் கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பெண்களும் கவிதைகளும் வெவ்வேறாகச் சித்தரிப்பது கடினம். சாரலின் சிதறலில் ஒரு க்யூட்டி தேவதை, கஸாட்டா கண்மணி, ரௌத்திர ராசாத்தி, அழகான கொலைகாரி, என் இனிய திமிரழகே போன்ற தலைப்புகள் இதற்கான உதாரணங்கள்.
‘கண் சிமிட்டலுக்கு அடுத்தது என்ன?’ என்று நண்பர்கள் வினவியபோது, தன் காதலனுக்காகக் கண்ணம்மா எழுதும் ஒரு கவிதை தொகுப்பை அடுத்த புத்தகத்தின் யோசனையாகத் தெரிவித்தேன்.

அதன்பின் அழகாக ஒரு விஷயம் என் மனதை ஆக்கிரமித்தது.
ஆண் பெரும்பாலான சமயங்களில் தன்னை ஒரு சூரன் என்று ஏமாற்றிக்கொள்கிறான், அவனது தடுமாற்றங்களை மறைப்பதற்கு கோபத்தை வெளிப்படுத்துகிறான், தன் இயலாமையை மறைப்பதற்கு அகங்காரத்தை வெளிப்படுத்துகிறான். தான் ஒரு ஆண் என்று பிரகடனப்படுத்திக்கொள்வதற்காக அவன் போடும் வேஷங்கள் ஏராளம். அவனைச் சுற்றி ஒரு பாதுகாப்பின்மை எப்போதுமே சூழ்ந்திருக்கிறது.
“சரி இதையெல்லாம் வைத்து ‘கண்ணம்மா’ என்ன கவிதை எழுதப் போகிறாள்” என்கிறீர்களா?

ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள் தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள் ஒளிந்திருக்கும் வெட்கம் இதுவரை அநேகமான கவிஞர்கள் எழுதாமல் விட்ட அபூர்வம். அவனுக்கு நெருக்கமானவர்கள் மீது அவன் காட்டும் அக்கறை ஈடில்லாதவை.

அதைத்தான் இந்தத் தொகுப்பில் ‘கண்ணம்மா’ எழுதியிருக்கிறாள்.
அவனுடனான காதல், காமம், ஏக்கம், அக்கறை, பாசம், தீண்டல், முத்தம், ஊடல், உரையாடல், சமிக்ஞை, சந்தோஷம், சண்டை முதலிய உணர்வுகள் ததும்பும் தருணங்களே ‘மிட்டாய் பயல்’.

‘மிட்டாய்ப் பயல்’ எல்லோருக்குமானதல்ல. ஒரு காதலி தன் காதலனுக்காகவோ, ஒரு மனைவி தன் கணவனுக்காகவோ, பல இடங்களில் நாம் குழம்பித் தவிக்கும் ‘இது என்ன மாதிரியான உறவு’ என்று புரியாத பெண் – ஆண் உறவுக்கு மிட்டாய்ப் பயல் முழுமையாகப் பொருந்திப்போவான்.

…இவை கவிதைகள் அல்ல
கவிதையான தருணங்கள்…