வேலையின்றித் தவிக்கும் இவ்வேளையில்
வேலவனை வேண்டும் சூழலும் வந்தது
வேதனையுடன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்
உச்சி வெயில் சுள்ளென்றடித்தது…
மேலே அண்ணாந்து அன்னாரைப் பார்த்தேன்
ஏளனம் பேசி சிரிப்பதுபோல சீறிட்டு அடித்தான் பகலவன்…
வெறுப்பு இப்போது கோபமானது
கணநேர கோபத்துடன் நடக்கும்போது
ஒரு வியர்வைத்துளி என் கையில் முத்தமிட்டது…
உளி கண்ட கல் தான் கடவுள் ஆகிறது
உருகக் காய்ச்சிய தங்கம்தான் அணிகலன் ஆகிறது…
உந்துதல் வந்தது… வைராக்கியம் முளைத்தது…
இன்னும் எத்தனைநாள்தான் இப்படி
வேலையின்றி படிப்படியாய் ஏறி இறங்குவது…
மதிய உணவு நேரம்
எதிரில் ஒரு தேநீர் விடுதி…
தேநீர்…
என்றோ விவரம் அறியா வயதில்
என் அன்னை குடுத்த தேன்-நீர் தான் தேநீர் என்று நினைத்த ஞாபகம்…
நினைவில் வந்த அடுத்த கவலை
எனக்குமட்டும்தான் இவ்வளவு குறைகளா?
எதிரில் உள்ள கோவிலை முறைத்துப் பார்த்தேன்…
62
அது ஓர் விநாயகர் ஆலயம்..
யானை முகம்.. மனித உடல்…
அங்கும் குறை ?
கடவுள் படைத்த
கடவுளின் மகனாகிய
கடவுளில் உடலிலேயே குறை…
சோகத்தின் உச்சிக்கே சென்றேன்.
தேநீருடன் அழுகையையும் விழுங்கிவிட்டு
எதிரில் இருந்த பூக்கடையை பார்த்தேன்…
அங்கு ஒருவர் ரேடியோ பேட்டி ஒன்றை கையில் வைத்து
நோண்டிக்கொண்டிருந்தார்…
இங்கும் குறையா?
‘குறை யாரைத்தான் விட்டது’, என்று நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரத்தில்
அப்பெட்டியிலிருந்து எம்.எஸ்.சுப்புலெட்சுமி அம்மாவின் குரல்
கண்ணியமான கம்பீரமான குரலில்…
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா…
என் உதட்டோரத்தில் சிறிய புன்னகை…
முயற்சிகள் தவறலாம்…
முயற்சிக்கத் தவறாதே…!!
வேலையில்லா பட்டதாரி
