கலைந்த முடியுடன்
நேற்று காலை வைத்த பொட்டு
அவள் கன்னத்தில் சரிந்து ஒட்டியிருக்க,
அவள் வைத்துச் சென்ற மல்லிகைப் பூ
வாடி வதங்கி ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருக்க.. அவள்
அணிந்திருந்த சின்ன கவுன் கீழே விழுவதற்கு
அணிலாய் துடித்துக்கொண்டிருக்க
துயில் மத்தியில் அரைக் கண்கள் பாவமாய் விழித்திருக்க
களைத்த உடலுடன்
தள்ளாடிக்கொண்டே வந்து
இறுக்கமாய் என்னைக் கட்டிக்கொண்டாள்…
‘டாடி இன்னைக்கு ஸ்கூல் லீவ் போடட்டா?’ என்றாள்.
‘ஏன்’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தேன்.
‘ப்ளீஸ் டா’, என்றாள்.
அம்மா பாசமாய் சொல்லும் ‘டா’வை விட
மனைவி காதலுடன் சொல்லும் ‘டா’வை விட
மகள் கொஞ்சலுடன் சொல்லும் ‘டா’ – தேன் ஒழுகும் கவிதை.
எந்தக் காரணமும் கேட்காமல், ‘சரி டா குட்டி’, என்றேன்.
அபூர்வமான வைர மழைத்துளிகளாய் எண்ணிக்கொண்டே
பத்து முத்தம் பொழிந்தாள்…
முந்தைய நாள் பள்ளிக் கதைகளை நினைத்து நினைத்து
விவரித்துக்கொண்டே என் மடியிலேயே உறங்கிவிட்டது
என் பிஞ்சுப் பறவை…
எழுப்ப மனம் வரவில்லை
நானும் விடுப்பு எடுத்துக்கொண்டேன்
என் ரோஜா மொட்டின் மௌனத்தை ரசிப்பதற்காக.
ரோஜா மொட்டு
