நான் கவர்மென்ட் ஸ்கூலில் 11ம் வகுப்பு படிக்கும்போது ‘பயாலஜி’ வாத்தியாராக வந்தவர் – மஹாதேவன். கன்னியாக்குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சொந்த மாவட்டமான பெரம்பளூருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வந்தாதாக சொன்னார்கள். இவர் வந்ததும்தான் எங்கள் வகுப்பில் இருந்த நிறைய பேருக்கு ‘பயாலஜி’ மேல் ஒரு ஈர்ப்பு வந்தது.
கவர்மெண்ட் ஸ்கூல்தானே என்று சராசரியாக பாடம் நடத்துவதோ உடை அணிவதோ செய்யமாட்டார். நன்றாக இஸ்திரி செய்யப்பட்ட பிளைன் முழுக்கை சட்டை, ஃபார்மல் பேண்ட், பாட்டா சண்டல் செருப்புகள், எப்போதும் பாக்கெட்டில் இரண்டு பேனா – ஒன்று சிவப்பு ஜெல் பேனா, இன்னொன்று கருப்பு மை-யில் எழுதும் ஹீரோ பேனா.மெரூன் கலர் லெதர் வாட்ச் காட்டியிருப்பார். ரொம்ப பொறுமையாகவும் தெளிவாகவும் பாடம் நடத்துவார். அதுவரை கடனே என்று பாடம் நடத்தும் வாத்தியார்களையே பார்த்து வந்ததால் எங்களுக்கு இது போன்று நன்றாக நடத்தும் வாத்தியாரை பார்க்கையில் உண்மையிலேயே நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மொத்த பள்ளியிலும் மஹாதேவன் வாதியாரைப்பற்றி தான் பேச்சு.
மாணவர்கள் மட்டுமில்லாமல் வாத்தியார்களிலேயே சிலர் அவரைப்போல் உடை அணிந்து மாணவர்கள் மத்தியில் வரவேற்பு வேண்டுமென்று மும்முரமாய் இருந்தனர். 2 மாதங்கள் வரை எந்த பிரச்சனையும் வரவில்லை.
ஒரு முறை ரெக்கார்ட் நோட்டில் படம் வரையச் சொல்லி – அதனை சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார். பெரும்பாலானோர் செய்திருந்தார்கள், சிலர் செய்யவில்லை. செய்திருந்த சிலரில் சிலர் சரியாக வரையவில்லை, சிலர் சரியாக எழுதவில்லை, சிலர் இங்க் ஊறும்படி எழுதியிருந்தார்கள்.
அந்த நாளில் ரொம்பவே மலர்ந்த முகத்துடன்தான் வகுப்புக்குள் நுழைந்தார். நான்கு மாணவர்களுடனும் இரண்டு மாணவிகளுடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அவருடைய நாற்காலிக்கு முன்னே இருக்கும் மேஜையில் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கார்ட் நோட்டுகளில் ஒன்றை பிரித்தார். கீழே வைத்தார். இரண்டு – அதையும் கீழே வைத்தார். மூன்று – எல்லோரையும் அமைதியாக ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாது. பேசிக்கொண்டிருந்த ஒன்று ரெண்டு உருப்படிகளும் வாயை மூடியது. நான்காவது நோட்டு – சேவல் பிடியிலிருந்து தப்பிக்க கோழி பட படவென்று பறந்து ஓடும் அல்லவா. வகுப்பின் வாயில் வழியாக அப்படி பறந்தது அந்த நோட்டு. அது – என்னுடையது. அடுக்கிவைக்கப்பட்டிருந்த 59-ல் 47 நோட்டுகள் பறந்தன.
அவர் பார்வையில் ஒரு அனல். சமமாக சுவாசிக்கவில்லை. எவனையாவது மிதித்தால்தான் என் கோபம் அடங்கும் என்பதுபோல் ஒரு உடல்மொழி.
“மயிராண்டி”ங்களா – என்றார்.
எந்த வாத்தியாரும் தனியாக அழைத்து திட்டுவார்களே தவிர இப்படி பெண்கள் இருக்கும் வகுப்பில் பொதுவாக “மயிராண்டி”களா என்னும் வார்த்தை எங்கள் எல்லாரையும் அதிர்ச்சியாக்கியது.
“நீங்க குறைவா காசு கட்டி படிக்கிறிங்க. இங்க படிக்கிற 80% பசங்களோட அம்மா அப்பா தினக் கூலிங்க. நீங்க படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தா, என்னவா அந்த குடும்பம் மாறும்னு ஒரு எழவும் தெரியல ஒருத்தனுக்கும். ஏனோதானோன்னா உங்களுக்குக்கெல்லாம் பாடம் எடுத்தேன். கணக்கு பீரியட் தமிழ் பீரியட்னு கடன் வாங்கி பொறுமையா படம் வரைஞ்சு விளக்கம் குடுத்து புஸ்தகத்துல இருக்கத மட்டும் நடத்தாம எதெல்லாம் அறிவுல போய் சேருமோ அதை சேர்த்து நடத்தி, உங்ககிட்ட ரெக்கார்ட் நோட்டு எழுதி படத்தை வரஞ்சிட்டு வாங்கடா-ன்னா ஏதோ பிச்சக்காரன் வாந்தி எடுத்தது போல நோட்ட கொண்டு வந்து வெச்சிருக்கீங்க.”
பெருமூச்சுக்கு பின்னே தொடர்ந்தார். “எல்லாவனும் டாக்டர் ஆயிடுங்கன்னுலாம் நான் நினைக்கல ய்யா. ஆனா நல்ல காலேஜ்ல பி.எஸ்.சி சுவாலஜி, பாட்டனி கிடைக்கும். அத முடிச்சு பி.ஹெச்.டி முடிச்சீங்கன்னா நல்ல வேலை கெடைக்கும். இந்த படிப்போட வேல்யூ என்னான்னு அப்பதான் தெரியும். இல்லன்னா இங்கனக்குள்ளயே ஏதாச்சு ஒரு அரசியல் கட்சிக்கு சொறியிற வேலையும் இல்ல ஜாதி சங்கத்துல புடுங்குற வேலையும் தினக்கூலியா மாரடிக்கிற வேலையும்தான் கெடைக்கும்.”
மீண்டும் தொடர்ந்தார். “குமாரசாமி எந்திரி யா. போயி உன் நோட்ட தேடி எடுத்துட்டு வா.”
குமாரசாமி கொஞ்சம் குள்ளமாகவும் குண்டாகவும் இருப்பான். வகுப்புக்கு வெளியே போய் ஒவ்வொரு நோட்டாக தேடிக்கொண்டிருந்தான்.
“உயிர குடுத்து நடத்துற வாத்தியானுக்கும் ஏதோ கடமைக்கு வந்து நடத்துறவனுக்கும் என்ன ய்யா வித்தியாசம் அப்போ.”
நியாயம்தானே. எந்த மனிதனுக்கும் தன் சமநிலையை உடைக்கும் அல்லது தனக்கென்று ஒரு மரியாதை இல்லையா என்ற தருணம் வரும்தான் அல்லவா.
அவர் பேசியதில் தவறு எதுவுமே இல்லை.
குமாரசாமி திடீரென அலறினான்.
அவனுடைய இரண்டு கால்களில் மாறி மாறி களிமண் மிதிக்கிறது. மஹாதேவன் வாத்தியார் குமாரசாமியின் வயிற்றை பிய்த்து எடுத்துவிடுவது போல் கிள்ளிக்கொண்டிருந்தார்.
“உங்கப்பா என்ன பன்றாரு?”
“மீன் விக்கிறாரு சார்.”
“ஒரு நாளாச்சு அவரு கூட தொழிலுக்கு போயிருக்கியா?”
“இல்ல சார்.”
“போயிருந்தா படிப்பு வரும். கஷ்டம் தெரியாம நல்லா சோத்த தின்னுட்டு வந்துடுற படிக்கிறேன்னு. ஏன் டா மயிராண்டி?”
“சார் சார் விட்டுருங்க சார். ரொம்ப வலிக்குது சார்”. கதறிக்கொண்டே சுருண்டு விழுந்தான் குமாரசாமி. அவரும் வகுப்பு முடிந்து புறப்பட்டார்.
மொத்த வகுப்புக்கும் அவர் பேசியது சரிதான் என்று தோன்றிய அதே நேரத்தில் மஹாதேவன் வாத்தியார் மீது வெறுப்பும் கிளம்பியது. கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில் பட்டை பெயருக்கா பஞ்சம். சிலர் அன்றிலிருந்து அவரை “மயிராண்டி வாத்தியார்” என்று நைசாக பேச ஆரம்பித்தனர்.
பதினொன்றாம் வகுப்பில் எங்கள் பிரிவில் அனைவருமே பயாலஜியில் தேர்ச்சி ஆகிவிட்டனர். சிலர் உண்மையாகவே படித்தார்கள், சிலர் பயந்து படித்தார்கள். அந்த வருடத்தின் தேர்ச்சி விகிதம் பள்ளியில் மற்ற ஆசிரியர்களிடம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
அதற்கிடையில் இன்னொரு செக்ஷன் மாணவன் – சைதன்யாவை வயிற்றில் கிள்ளி, அவன் குடும்பத்திலிருந்து புகார் வந்தது முதல், வாத்தியாரின் பேச்சிலும் நடத்தையிலும் ஒரு சுணக்கம் வந்தது. கோபம் குறைந்திருந்தது. நாங்கள் 12ம் வகுப்பு முடிக்கும் தருணத்தில் இருந்தோம். நன்றாக பாடம் நடத்துவதில் மட்டும் அவர் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளவே இல்லை. எங்களது அதிர்ஷ்டம் எங்களுக்கு 12ம் வகுப்புக்கும் அவரே பயாலஜி எடுத்தார்.
அவரது அறிவுரைகளை ஏற்று சிலர் நன்றாக படித்தனர். அவர்களிடம் மட்டும் நன்றாக பேசுவார். அறிவுரைகள் சொல்லுவார். சரியாக ரெக்கார்ட் எழுதாதவர்களை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்.
அவர் எங்கள் பள்ளிக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வந்தபோது ஆசிரியர்களுக்குளேயே ஒரு வெறுப்பும் பொறாமையும் வந்ததல்லவா. கணக்கு வாத்தியார் ஒருவர் தன்னிடம் டியூஷனுக்கு வரும் ஒரு 12ம் வகுப்பு மாணவியை வைத்து மீண்டும் ஒரு புகாரை அளித்தார். அந்த பெண்ணின் வயிறில் கிள்ளியதாகவும் தனக்குமுன் எல்லாரையும் “மயிராண்டி” என்று திட்டுவதாகவும், அதனால் மாணவிகள் முகம் சுழிப்பதாகவும், ஒரு மாணவி பள்ளியிலிருந்து டி.சி வாங்கிக்கொண்டு போனதற்கு காரணம் அவர்தான் என்றும் எழுதி கையெழுத்திடப்பட்ட ஒரு புகார் ஹெச்.எம் செல்லிற்கு சென்றது. புகாருக்கு விளக்கம் கொடுக்கச் சொல்லி மகாதேவன் வாத்தியாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கவர்மெண்ட் பள்ளி எங்களுக்குத்தான் சொந்தம் என்று நினைக்கும் சில நிரந்தர வாத்தியார்கள், ஹெச்.எம்-உடன் பரஸ்பர உறவு கொண்டாடும் சில வாத்தியார்களும் மஹாதேவன் வாத்தியாரை – “மயிராண்டி வாத்தியார்” என்று அவர் காதில் கேட்கும்படியே அழைக்க ஆரம்பித்தனர்.
அவரே பள்ளியை விட்டு செல்லவில்லையென்றால் அடிதடியில் ஈடுபடும் சில மாணவர்களை வைத்து வாத்தியாரை ‘அடிப்பது; என்ற நிலைமைக்கு உள்ளூர் ஆசிரியர்கள் சென்றார்கள். அவரிடமும் பிரச்சனை இருந்தது என்றாலும் கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில் ‘இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லப்படும் ஒரு சில வாத்தியர்களை பொறாமையும் அரசியலும் விஷமமும் விழுங்கிவிடுகிறது.
40 வருட பள்ளி வரலாற்றில் எங்கள் பள்ளியிலிருந்து ஒரு மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் மெடிக்கல் சீட் கிடைத்தது. செய்தித்தாள்களிலும் லோக்கல் கேபிள் டிவி-யிலும் அதை பெரிய செய்தியாக கவர் செய்தனர். அந்நேரத்தில் மஹாதேவன் என்னும் ‘மயிராண்டி வாத்தியார்’ பள்ளியை மட்டுமில்லாமல் ஊரையும் காலி செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்.
சில வருடங்களுக்கு பிறகு என்னவோ அவர் ஞாபகம் வந்து facebook-ல் இருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். மார்த்தாண்டத்தில் ஒரு பிரைவேட் ட்யூஷன் சென்டர் நடத்துகிறார். கடந்த ஆண்டு தன்னிடம் படித்த மாணவர்களில் 18 பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட்டுகள் கிடைத்திருப்பதாக பதிவு செய்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.
உறுதியோடிருக்கும் விதை எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும்தானே.