அவர்…
அம்மாவால் முடியாத சமயத்திலே என்னை தூக்கி வைத்துக்கொள்வார்…
அவ்வப்போது என்னை மேலே தூக்கிப்போட்டு விளையாட்டு
காட்டுவார்…
நன்றாக சவரம் செய்த முகம்…
நன்கு இஸ்திரி செய்த சட்டையே அணிவார்…
ஆட்டோ வராத நாட்களில் என்னை பள்ளியில் கொண்டுபோய்
விடுவார்…
அதட்டலும் அறிவுரையும் இரண்டு வரிகளிலே முடித்துவிடுவார்…
சினிமாவிற்கு அழைத்துச் செல்வார்…
சிக்கன் மட்டன் ஊட்டி விடுவார்…
இவருக்கு தெரியாத விஷயங்கள் இல்லை… ஊரில்
இவர் அறியாத இடங்கள் இல்லை…
ஹாஸ்டலுக்கு போன் செய்தால் கூட
வினாடிகளில் முடியும் இவர் பேச்சு…
மதிப்பெண்களின் மதிப்பினை சின்னச்சின்ன
சிறுகதையின் வழி உணர்த்துவார்…
பதநி குடிப்பதன் பயன்கள் சொல்வார்
தனியாகப் பயணிக்க தைரியம் சொல்வார்…
பேயென்று ஒன்றில்லை என்பார்…
உன்னைமீறி இறைவன் என்று ஏதும் இல்லையென்பார்…
சதவிகிதக் கணக்குகளை மனத்திலே முடித்துவிடுவார்…
நுங்கு சாப்பிடக் கற்றுத் தருவார்…
11
எவ்வளவு பெரிய கஷ்டத்திலும் அவர் அழுததில்லை…
எந்தப் பெரிய தோல்வியும் இவருக்கு வலித்ததில்லை…
அழுதாலும் வலித்தாலும் யாரிடமும் காட்டிக்கொண்டதில்லை…
நம்மை நம் முன் புகழாவிட்டாலும் ஊர் முழுதும் சொல்லிவைப்பார்,
என் மகன் இங்கே வேலை செய்கிறான்
இவ்வளவு சம்பளம் வாங்குகிறான்
ரொம்ப கெட்டிக்காரன் என்று..
நாட்களும் வருடங்களும் வழிந்தோட
சிலகாலம் வெளியூரில் வேலைசெய்து
என்றோ ஒரு நாள் விடுமுறைக்காக வீட்டிற்கு செல்லும் சந்தர்ப்பங்களில்
காலை 10 மணிக்கு சாவகாசமாய் எழுந்து
சோபாவில் அமர்ந்துகொண்டு
அதே வீட்டின் அசைபோடும் நினைவுகளுடன்
அம்மா கொடுத்த தேநீர்க் கோப்பையுடன் அமர்ந்திருக்கும்போது…
வீட்டு பால்கனியில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும்
அப்பாவைப் பார்க்கும்போது
லேசான வெள்ளைத் தாடியுடம் மூக்குக் கண்ணாடியும்
தாடைக்குக் கீழே சுருங்கிய தோலும் தொய்ந்துவிட்ட கட்டுமஸ்தான
உடம்பும்…
அசர வைக்கிறது இவ்வளவு நாள் அவர் ஏற்றுக்கொண்ட
‘அப்பா’ என்னும் உயர்ந்த பொறுப்பின் கனம்…
ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு நாயகனின் கதை இருக்கும்.
நாயகன்
