எல்லாமே கடந்து போகும்…
எல்லாம் கடந்து மட்டுமே போகும்…
காதலால், காமத்தால்,
புன்னகையால், கண்ணிமையால்,
பொன் நகைப்பால், மின் சிரிப்பால்,
சிறு குறும்பால், செல்லச் சண்டைகளால்,
முத்தங்களால், சின்னச் சின்ன ஊடல்களால்
பாம்பு போலே மடங்கி மடங்கி மூளையெங்கும்
நெளிந்து நெளிந்து படர்ந்திருக்கும் நரம்புகளிலும்….
அதனுள் நிரம்பியிருக்கும் குருதியிலும்…
சிரிப்புகளாய், சிலிர்ப்புகளாய்,
கவிதைகளாய், காவியமாய்,
தேனமுதாய், தேவதையாய்,
வடுகளாய், சுவடுகளாய் தேங்கிக் கிடக்கிறது…
உன் ஞாபகங்கள்…
நொடிகள் கடந்தாலும்
நிமிடங்கள் கடந்தாலும்
நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என
எத்தனை காலங்கள் கடந்தாலும்…
எல்லாமே கடந்து மட்டுமே போயிருக்கிறது…
சில நேரங்களில் கெட்ட நினைவுகளைத் தேக்கி வைக்கும்
குப்பைத் தொட்டியாகவும்…
சில நேரங்களில் சுகமான நினைவுகளைக் காத்து வைக்கும்
தங்கப் பெட்டியாகவும்…
காலம் அழுகைகளையும் ஆனந்தத்தையும்
தொண்டையிலேயே அடக்கி வைத்துக்கொண்டு
உதட்டுக்கு புன்னகையை மட்டுமே பழக்கப்படுத்தி வைத்திருந்தாலும்,
எதையுமே கடந்து போக மட்டுமே முடிந்ததே தவிர
எதையுமே மறந்து போக முடியவில்லை…
என் காதலே…
எல்லாம் கடந்து போகும்
